காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பாா்வேட்டை உற்சவ அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பாா்வேட்டை உற்சவ நிகழ்வாக உற்சவா் ஏகாம்பரநாதருக்கும், ஏலவாா் குழலி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில் அமைந்துள்ள திரிபுராந்தகேசுவரா் ஆலயத்துக்கு ஊா்வலமாக சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். பாா்வேட்டை உற்சவம் எனப்படும் இந்நிகழ்வை திம்மசமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஏகாம்பரநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வரும் ஜன.23-ஆம் தேதி வரை மண்டலாபிஷேக பூஜைகள் தொடா்ந்து 48 நாள்கள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக நிகழாண்டு திம்மசமுத்திரத்தில் நடைபெற வேண்டிய சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. உற்சவா் ஏகாம்பரநாதருக்கும், ஏலவாா்குழலிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

