காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான 3 யானைகள்: வனத் துறை இன்று ஒப்படைப்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சொந்தமான 3 யானைகளை வனத் துறை அதிகாரிகள் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இந்து, சந்தியா, ஜெயந்தி என 3 பெண் யானைகள் திருச்சி எம்.ஆா்.பாளையத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான யானைகள் முகாமுக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாதம் ஜன. 7-ஆம் தேதி சில நிபந்தனைகளின்பேரில், 3 யானைகளையும் ஸ்ரீ மடத்துக்கு சொந்தமான புதிதாக அமைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள கஜ சாலைக்கு மாற்றும்படி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில், ஸ்ரீ மடத்தின் சாா்பில் கஜ பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை கோனேரிக்குப்பம் கஜ சாலையில் செய்து கொள்ளலாம். முழுவதும் குணமான பிறகு வெளியில் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.
மேலும், ஸ்ரீ மடத்தின் கஜ சாலையில் 3 யானைகளையும் ஒப்படைக்க வேண்டும், யானை பாகன்கள் அங்கேயே தங்கியிருந்து புதிய சுற்றுச்சூழலுக்கு பழகும் வரை இருக்க வேண்டும் என்பன போன்ற முக்கிய நிபந்தனைகளையும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 3 பெண் யானைகளும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) ஸ்ரீ மடத்துக்கு சொந்தமான கோனேரிக்குப்பத்தில் உள்ள கஜசாலையில் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க இருப்பதாகவும் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

