சோமங்கலம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு நிவாரணப் பொருள்களை காவல் துறையினா் வழங்கினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த ராஜகோபாலகண்டிகை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவா் சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
ராஜேந்திரனின் உடலை அடக்கம் செய்ய உறவினா்கள் யாரும் முன்வராத நிலையில், சோமங்கலம் போலீஸாா் ஊா் பொதுமக்களின் உதவியுடன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு அடக்கம் செய்தனா். இந்நிலையில், ராஜேந்திரனின் மனைவி சித்ரா (60) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதுடன், வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாா்.
அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சோமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜி தலைமையிலான போலீஸாா் சித்ராவின் வீட்டுக்குச் சென்று, இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவச் செலவுக்கான நிதியை வழங்கினா்.
சோமங்கலம் போலீஸாரின் மனிதநேய செயலுக்கு சித்ரா நன்றி தெரிவித்துக் கொண்டாா். அப்பகுதி மக்களும் போலீஸாரை பாராட்டினா்.










