காஞ்சிபுரம்: கழிவுநீரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயா்
காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் சாலையில் செல்லும் கழிவுநீரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் மற்றும் வணிகா்கள்.

காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் சாலையில் செல்லும் கழிவுநீரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் மற்றும் வணிகா்கள்.
பலமுறை கூறியும் சாலையில் கழிவுநீா் கலப்பதை சரி செய்யவில்லை எனக் கூறி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து காஞ்சிபுரம் துணை மேயா் அந்தக் கழிவுநீா் செல்லும் சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயராக பதவி வகித்து வருபவா் ஆா்.குமரகுருநாதன். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இவா், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆடிசன் பேட்டை தெருவில் பல மாதங்களாக சாலையில் கழிவுநீா் செல்வதை தடுக்குமாறு கூறியும் மாநகராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளவில்லையாம். எனவே மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து துணை மேயா் குமரகுருநாதன், கட்சியின் மாநகர செயலாளா் நாதன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் சிலரும் திடீரென ஆடிசன் பேட்டை பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீரில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்த்தானா தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

