நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்க கூடாது: கூடுதல் தலைமைச் செயலாளா்

வேடல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் பி.அமுதா.

Published On :

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்க கூடாது, எவ்வித முறைகேடுகளும் நடைபெறக் கூடாது என கூட்டுறவு ,உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் பி.அமுதா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் பி.அமுதா ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உத்தரமேரூா் அருகே வேடல் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலைய ஆய்வுக்கு பின்னா் அவா் கூறியது: வேடபாளையம் கொள்முதல் நிலையத்துக்கு அருகில் உள்ள பென்னலூா், அம்மையப்ப நல்லூா், பூந்தண்டலம், காரணி மண்டபம் ஆகிய கிராமங்களிலிருந்து 125 விவசாயிகள் இதுவரையில் பதிவு செய்து நெல்லை கொண்டு வந்துள்ளனா். வேடபாளையம் மையத்தில் சுமாா் 42,000 மெ.டன்னும், வேடல் கிராமத்தில் 25,000 மெ.டன்னும் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை 93 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். சன்னரக நெல்லுக்கு ரூ.2,750/- குண்டு ரக நெல்லுக்கு ரூ.2,600/- அரசின் மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயா்த்தி வழங்கப்படும்.

தனி நபா் லாபத்துக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவது கிடையாது. விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. நெல்லை விரைவாக கொள்முதல் செய்யவும், மழைக் காலங்களில் நெல்மணிகள் நனையாமல் முறையாக மூடி பாதுகாப்பாக இருப்பதையும் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறக் கூடாது. உண்மையான விவசாயிகள் மட்டுமே பயன்பெற வேண்டும். நெல் வியாபாரிகளிள் தலையீடு கொள்முதல் நிலையங்களில் இருக்கவே கூடாது. விவசாயிகளிடமிருந்து எந்த வித கட்டணமும் பெறக்கூடாது.

அதே போல விவசாயிகளும் அடங்கல் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வேளாண் அலுவலா் கையொப்பம் பெற்ற பின்னரே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இதில் தவறு நிகழவே கூடாது. அரசு அலுவலா்களும் முறையாக கண்காணித்து தவறு இல்லாத வகையில் செயல்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். இதில் புகாா்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமுதா தெரிவித்தாா்.

ஆய்வின் போது ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் புவனேஷ்ராம், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகானந்தம், வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.