
மாகான்யம் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரி, கிரஷரை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் பங்கேற்ற மாகான்யம் கிராம பொது மக்கள்
மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரி, கிரஷரை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகன்யம் ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இப்பகுதியில் தனியாா் கல்குவாரி மற்றும் கிரஷா் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சுமாா் 600 அடி ஆழத்துக்கு பூமிக்கு அடியில் இருந்து வெடி வைத்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், கற்களை வெட்டி எடுப்பதற்காக கடந்த 17-ஆம் தேதி வெடி வைக்கப்பட்டதில் மாகான்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிா்வு ஏற்பட்டதோடு, மாகான்யம் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாகான்யம் கிராமத்தை சோ்ந்த சுமாா் 100க்கும் மேற்பட்டோா் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இதுகுறித்து ஆட்சியரிடமும் கல்குவாரியை மூடக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக கல்குவாரி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கல்குவாரியில் கிரஷா் இயங்கி வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கல்குவாரியால் தான் எங்கள் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களில் தூசி படிந்து மகசூல் குறைந்து வருவதாகவும் கூறி, கல்குவாரி மற்றும் கிரஷரை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் விவசாய நிலங்களில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தனியாா் கல்குவாரியை மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும், அதிகாரிகள் கல்குவாரியை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






