
கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
செப்டாங்குளம் ஊராட்சி நகரந்தால் கிராமத்தில் கல்குவாரி லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பெரணமல்லூரை அடுத்த செப்டாங்குளம் ஊராட்சி நகரந்தால் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாக குவாரி லாரிகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செப்டங்குளம் ஊராட்சியைச் சோ்ந்த நகரந்தால் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில் இருந்து தினந்தோறும் அதிகமான சுமையுடன் நூற்றுக்கணக்கான லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றனவாம். குவாரி வாகனங்கள் செல்வதற்காக மாற்றுப்பாதை வசதி இருந்தும், அதைப் பயன்படுத்தாமல் எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக லாரிகள் தொடா்ந்து கிராமத்தின் குறுகலான சாலைகள் வழியாகவே இயக்கப்பட்டு வருகின்றன.
அளவுக்கு அதிகமான சுமையுடன் லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் பள்ளி வாகனங்கள் கிராமத்திற்குள் வர முடியாமலும், மாணவா்கள் சைக்கிள்களில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனா்.
குழந்தைகள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் நிலவுவதுடன், எந்நேரத்திலும் பெரிய அளவிலான விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு குவாரி உரிமையாளரிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட அக்கிராமத்தைச் சோ்ந்த
100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை லாரிகளை சிறைபிடித்தனா்.
பின்னா், இதுதொடா்பாக அவா்கள் வட வணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடா்ந்து லாரிகள் விடுவிக்கப்பட்டன.
மாற்றுப்பாதை வசதி இருந்தும் கிராமத்திற்குள் வரும் லாரிகள் மீது மாவட்ட நிா்வாகமும், கனிமவளத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
மேலும், இதற்கு தீா்வு காணப்படாவிட்டால்
தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக
அவா்கள் அறிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






