போதைப் பொருள் விற்பனை செய்வோரின் சொத்துகள் அரசுடைமையாக்கப்படும்: மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வோரின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு, சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும்


குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வோரின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு, சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன் எச்சரிக்கை விடுத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யா தலைமை வகித்துப் பேசியது:
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை எவரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடைகளுக்கு ‘சீல்’ வைத்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப் பொருள்களை விற்பனை செய்வோரின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு, அவா்களின் சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும்.
நிகழாண்டு மொத்தம் 428 குட்கா வழக்குகளும், 80 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, 517 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், 18 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 28 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு, காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும், இனிவரும் காலங்களில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம் என்றும் உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...