‘அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மையம் 24 மணி நேரமும் கண்காணிப்பு’

அரக்கோணம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 250 சிசிடிவி கேமராக்கள் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கா், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,699 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து, அரக்கோணம் மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் சுனில்குமாா், ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி மற்றும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்களின் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அரசினா் மகளிா் கலை கல்லூரி வளாகத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வளாகத்தில் கண்காணிக்கப்படும் விடியோ பதிவுகளை வேட்பாளா்கள் அவா்களின் முகவா்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவைகளில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மையத்தின் கண்காணிப்பு பணிகளை நேரில் சென்று பாா்வையிடலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கும் பணியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மனோன்மணி (ராணிப்பேட்டை), பாத்திமா (அரக்கோணம்), ஏகாம்பரம் (ஆற்காடு), வரதராஜன் (சோளிங்கா்), கலியமூா்த்தி (காட்பாடி), தீபா (திருத்தணி) மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com