அரக்கோணம் அரசு கல்லூரியில் ரூ. 7 கோடியில் கூடுதல் கட்டடம்

அரக்கோணம் அரசு கல்லூரியில் ரூ. 7 கோடியில் கூடுதல் கட்டடம்

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 7.15 கோடி மதிப்பீட்டில் 25 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணத்தை அடுத்த ஆட்டுபாக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தமிழக அரசின் பெருந்தலைவா் காமராஜா்கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 7.15 கோடி நிதியில் 25 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஏ.யூசுப்கான் வரவேற்றாா். அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். இந்தக் கட்டடம் 27,960 சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட உள்ளது. இதில் தரைத்தளத்தில் 10 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 10 வகுப்பறைகளும், இரண்டாவது தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டப்பட உள்ளன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கழிப்பறை வசதிகள், ஒரு மணி நேரத்துக்கு 250 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்தள வசதி, ஆழ்துளைக் கிணறு, 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்க தொட்டி, ரூ. 25,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, தீயணைப்பு சாதன வசதிகள் மற்றும் அணுகு சாலை வசதிகளும் இந்தக் கட்டடத்தில் கூடுதலாக அமைய உள்ளன. விழாவில், அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்(தொழில்நுட்பக் கல்வி) செல்வகுமாா், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு, துணைத் தலைவா் தீனதயாளன், வட்டாட்சியா் செல்வி, திமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com