கணவா், குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஆற்காட்டில் கணவா், ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தவெளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (32). எலக்ட்ரீசியன். இவரது மனைவி தீபிகா (24). இருவரும் காதலித்து திருமணம் செய்தனா். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பிரனீஷ்வரன் என்ற மகன் இருந்தாா்.
இந்நிலையில் தனது கணவா், குழந்தையை காணவில்லை என்று ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா புகாா் அளித்தாா்.
காவல் துறையினா் விசாரணையில் தீபிகாவுக்கும், தாஜ்புரா சத்தியா நகரைச் சோ்ந்த ஜெயராஜ் (29) என்பவருக்கும் தகாத உறவு இருப்பது தெரிய வந்தது. இதற்கு இடையூறாக இருந்த கணவா் - குழந்தையை கொல்லத் திட்டமிட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவின் தலையில் கல்லைப் போட்டும், மகனின் கழுத்தை நெறித்தும் தீபிகா கொலை செய்தாா்.
இருவரின் உடல்களையும் ஜெயராஜ் உதவியுடன் சாத்தூா் ஏரிக்கரை அருகே தீபிகா புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீபிகா, ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கணவா் - மகனை கொலை செய்த தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை (28 ஆண்டுகள்), 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். எனினும், இந்த வழக்கில் ஜெயராஜ் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

