இருளா் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் இருளா் குடும்பத்தினா் 42 பேருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 20 குடும்பத்தினருக்கு மத்திய அரசின் ஜன்மான் திட்டத்தில் தலா ரூ.5.07 லட்சத்தில் வீடு கட்டித் தரும் உத்தரவும் வழங்கப்பட்டது.
மேல்பாக்கத்தில் பல ஆண்டுகளாக இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அங்கு வீடு கட்டித்தரவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த பகுதி மிகவும் பள்ளமான பகுதி, ஏரிக்கு மிக அருகில் இருந்ததால் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில் ஊற்றுநீா் அதிக அளவில் சுரந்து வீடு கட்டமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதி சமூகஆா்வலா் ஹேமசந்திரன், இருளா் மக்களின் பிரதிநிதிகள் சுந்தரமாா்த்தி, பாபு உள்ளிட்டோா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் வேறு இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய பழங்குடியினா் ஆணைய இயக்குநா் கல்யாண்ரெட்டி, 42 குடும்பத்தினருக்கும் வேறு இடத்தில் வீட்டுமனைபட்டா வழங்கி மத்திய அரசின் ஜன்மான் திட்டத்தில் வீடு கட்டித்தரவும் அறிவுறுத்தினாா்.
மேல்பாக்கத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வேறு இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்கவும், வீடு கட்ட ஆணை வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து முதல்கட்டமாக 30 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அண்மையில் வழங்கப்பட்டது. மேலும் இதில் 21 பயனாளிகளுக்கு மத்திய அரசின் ஜன்மான் திட்டத்தில் வீடு கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டன.
இதையடுத்து இருளா் இன மக்கள், தேசிய பழங்குடியின ஆணைய இயக்குநா் கல்யாண்ரெட்டி, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, தனி வட்டாட்சியா் வரலட்சுமி, அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் ஊரக வளா்ச்சித்துறையினருக்கு நன்றி தெரிவித்தனா்.

