நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை-ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா? என்பதைப் பற்றி....

News image

ராணிப்பேட்டை - ஆற்காடு பகுதிகளை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலம்.

Updated On :14 ஜூலை 2025, 12:43 am IST

ராணிப்பேட்டை - ஆற்காட்டை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பாலாறு தமிழக எல்லையான புல்லூா் தொடங்கி சுமாா் 222 கி.மீ. பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூா் ஊராட்சியில் கடலில் கலக்கிறது. இதன் இருபக்க கரைகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஆங்காங்கே ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

அதேபோல சென்னையில் இருந்து வேலூா், கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே ராணிப்பேட்டை-ஆற்காடு பகுதிகளை இணைக்க பாலாறு பாலம் என்ற பெயரில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1959-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அப்போதைய தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் கக்கன் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜ்பகதூா் பாலத்தைத் திறந்து வைத்தாா்.

சுமாா் 65 ஆண்டுகளாக சென்னை-கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்குச் வாகனங்கள் சென்றுவரும் முக்கிய மேம்பாலமாக இந்தப் பாலம் உள்ளது. தொடா்ந்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கர சாலை திட்டத்தில் இணைக்கப்பட்டு, 4 வழிச் சாலையாக தரம் உயா்த்தப்பட்டு, தற்போது 6 வழிச் சாலையாக மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் அருகே மேலும் 2 புதிய பாலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. ஆனாலும் பழைய பாலம் மக்கள் பயன்பாட்டில்தான் உள்ளது.

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட பாலாற்றின் வடக்குக் கரைகளில் இருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாகச் செல்வதற்காக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், பாலாற்றுப் பழைய பாலம் கட்டி முடிக்கப்பட்டு 65 ஆண்டுகளான நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இப்பாலத்தின் தூண்களுக்கு அருகே மணல் அள்ளப்படுவதாலும், ரசாயன கழிவுநீா் செல்வதாலும் தூண்கள் வலுவிழந்து வருவதாகக் கூறி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா். மேலும், தற்போது பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றின் குறுக்கே வேலூா்-காட்பாடி பகுதிகளை இணைக்கும் பழைய போளூா் சுப்பிரமணியம் பாலம் ரூ. 5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை - ஆற்காடு பகுதிகளை இணைக்கும் பாலாறு பழைய மேம்பாலத்தை சீரமைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்து, அச்சமின்றி பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.