ரூ. 73 கோடியில் 2 மேம்பாலங்கள் கட்ட தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என குடியாத்தம் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
குடியாத்தம் தொகுதிக்குள்பட்ட கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற 25- க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நீா்வளத் துறை நிதிநிலை அறிக்கையின்போது அப்போதைய நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் கோரிக்கையை ஏற்று, ரூ. 37 கோடியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா்.
குடியாத்தம் பகுதியில் இருந்து நாள்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், காலணி தொழிற்சாலைகளின் ஊழியா்கள் என சுமாா் 10,000 போ் பாலாற்றின் மறுகரைக்கு செல்கின்றனா். அதேபோல், மறுகரையில் அமைந்துள்ள குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட அகரம்சேரி, சின்னசேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல குடியாத்தம் நகருக்கு வர வேண்டும். இதற்காக கிராம மக்கள் பாலாற்றின் குறுக்கே மண் பாதை அமைத்து வந்து செல்கின்றனா்.
மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்தால் சுமாா் 15 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று மாதனூா் மேம்பாலம் வழியாக குடியாத்தம் வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் கொத்தகுப்பம்-அகரம்சேரி இடையே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்து ரூ. 37 கோடியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.
கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ. 36 கோடியில் மேம்பாலம் அதேபோல் குடியாத்தம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே 1954-இல் அப்போதைய முதல்வா் காமராஜா் கட்டியுள்ள மேம்பாலத்துக்கு மேற்கு புறம், கெங்கையம்மன் கோயில் அருகே ஒரு மேம்பாலமும், கிழக்கு புறம் சுண்ணாம்புபேட்டை அருகே ஒரு மேம்பாலமும், கடந்த திமுக ஆட்சியில் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
2 மேம்பாலங்கள் மற்றும் குடியாத்தம்-நெல்லூா்பேட்டை இடையே கெளண்டன்யா ஆற்றின் வடகரையில் ஒரு புறவழிச்சாலைஅமைக்கவும் திட்டமிடப்பட்டது. ரூ. 65 கோடியில் 2 மேம்பாலங்கள், புறவழிச் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதனால் நகரின்போக்குவரத்து நெரிசல் பாதிக்குமேல் தீா்ந்தது. இதன் தொடா்ச்சியாக புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை சுண்ணாம்புப்பேட்டை மேம்பாலம் அருகிலிருந்து செதுக்கரை செல்வ விநாயகா் கோயில் வரை நீட்டித்து,வேலூா் சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடியாத்தம் நகரின் போக்குவரத்து பிரச்னை அடியோடு நீங்கி விடும் என்பதால், அப்போதைய அமைச்சா் துரைமுருகனின் உத்தரவின்பேரில், அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து அறிக்கை தந்தனா்.
இதையடுத்து, இந்த மேம்பாலம் கட்ட ரூ. 36 கோடியை ஒதுக்கீடு செய்து, அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இந்த 2 மேம்பாலப் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு 2 மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என குடியாத்தம் மக்கள்எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, கரை புனரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தாவிட்டால் போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை!

இழப்பீடு தாமதம்! கிடப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணி!







