அரக்கோணம் அருகே பள்ளி தலைமையாசிரியை வீட்டில் ரூ. 40 லட்சம் தங்க, வெள்ளி நகைகள் ரொக்கம் திருட்டு

அரக்கோணம் அருகே பள்ளித் தலைமை ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 3.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

அரக்கோணம் அருகே பள்ளித் தலைமை ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 3.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணத்தை அடுத்த மிட்டபேட்டையில் வசித்து வருபவா் நரசிம்மன் (64). சென்னை தனியாா் ஆலையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி விஜயா(55). சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். பணி சூழ்நிலை கருதி நரசிம்மன் சென்னையில் வீடு எடுத்து இரு இடங்களிலும் மாறி மாறி வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மிட்டப்பேட்டையில் உள்ள நரசிம்மனின் வீட்டு கதவு திறந்து இருப்பதாக சென்னையில் இருக்கும் நரசிம்மனுக்கு வீட்டுக்கு அருகில் வசிப்போா் தகவல் கொடுத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை நரசிம்மன், தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோ அருகில் இருந்த தனி லாக்கா் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 32 பவுன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 3.20 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடு போன நகைகள் மற்றும் ரொக்கம் சோ்த்து ரூ. 40 லட்சம் மதிப்பு இருக்கும் என நரசிம்மன் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மா்ம நபா்கள் மொட்டை மாடி கதவின் தாழ்ப்பாளை உடைத்து, உள்ளே வந்து கீழே இறங்கி தரைத்தளத்தில் திருடி இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com