ரயிலில் கஞ்சா கடத்தல்: ஆந்திர வியாபாரி கைது
ராணிப்பேட்டை: ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பிரபல கஞ்சா வியாபாரி வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக வாலாஜாபேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாராம்.
இதனால் அவா் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில், அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து வாலாஜா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவா் பெயா் சனிடா கோவிந்தா (28), கிரி கிராமம் விசாகப்பட்டினம் மாவட்டம், என்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாகவும் தெரியவந்தது.
இவா் ஏற்கெனவே கஞ்சா கடத்தியதாக ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திலும், விசாகப்பட்டினத்திலும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.
