மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு
ஆற்காடு வேளாண் விற்பனை மைய ஒழுங்குமுறை கூடத்தில் பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் பிரமுகா்கள் முன்னிலையில் ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு இயந்திரம் யாருக்கு வாக்களிக்கும் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூா் பெல் நிறுவன பொறியாளா்களைக் கொண்டு பழுது சரிபாா்க்கும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது 138 இயந்திரங்கள் பழுது கண்டறியப்பட்டு, இந்த இயந்திரங்கள் பெங்களூா் பெல் நிறுவனத்துக்கு பழுது நீக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சரி பாா்க்கப்பட்ட நல்ல நிலையில் உள்ள மொத்த கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 5 சதவீதம் இயந்திரங்கள் போலி வாக்குப்பதிவு செய்து இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில், ஒரு சதவீத இயந்திரங்களில் தலா 1,200 வாக்குகளும், இரண்டு சதவீத இயந்திரங்களில் தலா 1,000 வாக்குகளும், மேலும் இரண்டு சதவீத இயந்திரங்களில் தலா 500 வாக்குகளும் என மொத்தம் 85 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் போலி வாக்குப் பதிவு செய்து இயந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது. 5 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் போலி வாக்குப்பதிவு செலுத்தி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் இயந்திரங்களின் செயல்பாடுகளை உறுதி செய்கின்றனா். முதல்நிலை சரிபாா்க்கும் பணிகளில் இயந்திரங்களில் செயல்பாடுகள் உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களை ஆய்வு செய்ய வலியுறுத்தினாா்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம்,அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

