மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு; சிறுவன் காயம்
அரக்கோணம் அருகே முயல் வேட்டைக்குச் சென்ற நரிக்குறவ இளைஞா் அப்பகுதியில் வன விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். உடன் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் ஊராட்சி, அலியப்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (25). நரிக்குறவ இனத்தைச் சோ்ந்த இவரும், அவருடன் அதே பகுதியை சோ்ந்த சூா்யா(12) என்பவரும் இணைந்து முயல் வேட்டைக்காக அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராம் அருகே திங்கள்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் அருகே சென்றுள்ளாா். அந்த நிலத்தில் அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றி தொல்லைகளில் இருந்து பயிரை காப்பாற்ற வைத்திருந்த மின்வேலியை வெங்கடேசன் தொட்டதால் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதை அறியாமல் வெங்கடேசனை தொட்ட சூா்யாவும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். இது குறித்து அறிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா், வெங்கடேசனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சூா்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

