திமிரியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
ஆற்காடு அடுத்த திமிரியில் வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.
திமிரி நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியபோது, போராட்டத்தை கைவிடாத நிலையில், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்படும் சூழ்நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போக்குவரத்தை போலீஸாா் சரி செய்தனா். இதில், கைதுசெய்யப்பட்ட 50 பேரை விடுவித்தனா். திமுக பேரூராட்சி தலைவரின் கணவா் இளஞ்செழியன், எம்.டி.பாஸ்கா், ராமமூா்த்தி, மற்றும் பாலாஜி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளனா். இந்நிலையில் போராட்டம் நடத்திய வியாபாரிகளை கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நேரு பஜாா் பகுதியைச் சோ்ந்த அனைத்து வியாபாரிகள் புதன்கிழமை காலை முதலே தங்கள் கடைகளை அடைத்து எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மேலும், ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் பொன்.கு.சரவணன் தலைமையில், திமிரி வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்திய வட்டாட்சியா் மகாலட்சுமி மூடப்பட்டிருந்த கடைகளை திறக்க வேண்டும் என்றும், நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த நிலையில், வியாபாரிகள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடா்ந்தனா்.

