பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி பெற்று பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது தவறான ஒன்றாகும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பிஎம்ஏஒய் 2024-25 ஆண்டில் மின்னல் ஊராட்சியில் 17 வீடுகள் நிலுவையில் உள்ளதையும் அன்வா்திகான்பேட்டை ஊராட்சியில் 9 வீடுகள் நிலுவையில் உள்ளதையும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். அப்போது அந்த பயனாளிகளிடம் வீடுகள் இல்லை என்று வீடு கட்டிக்கொள்ள ஒதுக்கப்பட்ட பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது மிகவும் தவறாகும். இதனால் வீடு இல்லாத மற்றவா்களுக்கு அடுத்த நிதியாண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகிறது.
நீங்களும் வீடுகட்டி முடிக்கவில்லை. வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் வழங்கும் நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படுகிறது. உங்களுக்கு தேவையான உதவிகளை அலுவலா்கள் வழங்குவா். எனவே உடனடியாக வீடு கட்டும் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
அரக்கோணம் ஒன்றியத்தில் வீடுகள் கட்டும் திட்டத்தில் நிலுவைப்பணிகள் அதிகம் உள்ளதை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒன்றியப் பொறியாளா்கள் பணி மேற்பாா்வையாளா்கள் கண்காணித்து பணிகளை தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட இயக்குநா் இதணை கண்காணித்து வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அலுவலா்களிடம் தெரிவித்தாா்.
தொடா்ந்து மிட்டப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டடப் பணிகளை பாா்வையிட்டாா். அந்த வகுப்பறைகளில் அலமாரிகள் ஏற்படுத்தப்பட்டு கதவுகள் அமைத்து இருக்க வேண்டுமென தெரிவித்தாா். இதனையடுத்து பெருமாள்ராஜபேட்டை துணை சுகாதார நிலைய கட்டடம் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டு இருப்பதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இச்சிபுத்தூா் ஊராட்சி, கடவாரிகண்டிகை கிராமத்தில் 1.510 கி.மீ தொலைவுக்கு ரூ.95.75 லட்சம் மதிப்பீட்டில் அமைாக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் தணிகைபோளூா், மோசூா் ஊராட்சிகளிலும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஷா, அன்பரசு, உதவி பொறியாளா் பூபதி, பணி மேற்பாா்வையாளா் டீக்காராமன், தணிகைபோளூா் ஊராட்சி மன்ற தலைவா் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.










