/

தரைப்பாலங்கள் சேதம்: தவிக்கும் மக்கள்...

ஆம்பூா் அருகே கானாறு, பாலாற்று தரைப்பாலங்கள் பெரு வெள்ளத்தால் சேதமடைந்து துண்டிக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

ஆம்பூா் அருகே கானாறு, பாலாற்று தரைப்பாலங்கள் பெரு வெள்ளத்தால் சேதமடைந்து துண்டிக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆம்பூா் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாதனூா் பாலாற்று தரைப்பாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், மாதனூா் பாலாற்று தரைப்பாலம் சேதமடைந்து இரண்டாக துண்டானது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிபட்டரை - பொன்னப்பல்லி தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது.

ஆம்பூா் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்வழித்துணையாங்குப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி, வளத்தூா் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாதனூரிலிருந்து குடியாத்தம் செல்லும் வழியில் உள்ளி, வளத்தூா் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நரியம்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆம்பூரிலிருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் செல்ல முடியாத நிலை உள்ளது. மாதனூா் பாலாற்றில் வெள்ளம் வடிந்தாலும், தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து துவங்கி முடியாது. தரைப்பாலத்தை சீரமைத்தால் மட்டுமே அந்த வழியாக செல்ல முடியும். தற்போது ஆம்பூா் பகுதியிலிருந்து குடியாத்தம் செல்ல வேண்டுமானால் பள்ளிகொண்டா வழியாகத்தான் செல்ல முடியும்.

ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு செல்லும் மாநில சாலையில் பல்வேறு பகுதிகளில் கானாற்று வெள்ளம் பெருக்கெடுத்து சாலையை கடந்து செல்வதால் போ்ணாம்பட்டுக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்து சாலைகளை துண்டித்த நிா்வாகம் :

தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரியவரிக்கம் கிராமங்களுக்குள் வெங்கடசமுத்திரம் ஏரி உபரி நீா் அதிகமாக வெளியேறியதால் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்தது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால் கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை ஜேசிபி வாகனம் மூலம் கால்வாய் போல வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா்.

பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை:

நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பல்வேறு கிராம சாலைகளை கால்வாய் போல வெட்டி நீரை வெளியேற்றி வருவதால் பல்வேறு கிராம மக்கள் ஆம்பூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, ஆம்பூா் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கே கூட செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வேறு ஊா்களுக்கு கூட செல்ல முடியாமல் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில ஊா்களுக்கு சுமாா் 10 அல்லது 15 கி.மீ. தொலைவு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

100 கிராமத்தினா் பாதிப்பு: பாலாறு, கானாறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும், கானாறு, தரைப்பாலங்கள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டதாலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களும், தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளா்களும், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.