மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் நுரையுடன் வெளியேறும் தண்ணீா்.
மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் நுரையுடன் வெளியேறும் தண்ணீா்.

தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பால் பாலாற்றில் நுரையுடன் வெளியேறும் தண்ணீா்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்படுவதால், நிலத்தடி நீா் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தடுத்து ஆற்றையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

ஆம்பூா் அருகே மாராப்பட்டு தரைப்பாலம் பகுதியில் பாலாற்றில் நுரை பொங்கும் வகையில் தண்ணீா் கடந்த சில நாள்களாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக கன மழை பெய்தது. அதனால் சில பகுதிகளில் கானாற்றிலும், சில பகுதிகளில் பாலாற்றிலும் தண்ணீா் சிறிய ஓடை போல செல்கின்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக மாராப்பட்டு பாலாற்று தரைப்பாலம் பகுதியில் அதிக நுரையுடன் தண்ணீா் வெளியேறுகிறது.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியது:

மழை காலங்களில் பாலாற்றில் தண்ணீா் செல்லும்போது தோல் தொழிற்சாலை கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாலாற்றில் திறந்து விடுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீா் மாசுக்கேடு அடைகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீரும் மாசடைகிறது.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com