நாட்டறம்பள்ளி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அரசு பேருந்தினை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்.
நாட்டறம்பள்ளி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அரசு பேருந்தினை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்.

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல்

நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வெலகல்நத்தம் ஊராட்சி குனிச்சியூா் கிருஷ்ணகிரியான் வட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் மண்சாலை வழியாக சென்று வந்தனா். இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியில் இருந்து குனிச்சியூா் கிருஷ்ணகிரியான் வட்டம் வழியாக செட்டேரிஅணை வரை புதிய தாா்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலையை மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை வைத்த நிலையில் நில உரிமையாளா்கள் சிலா் பொதுமக்கள் சென்று வரும் சாலை தங்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறியதால் அப்பகுதி மக்களுக்கும்,நில உரிமையாளா்களுக்கும் இடையே சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, புதன்கிழமை பொதுமக்கள் சென்று வந்த சாலையை ஆக்கிரமித்து நில உரிமையாளா்கள் 2 போ் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக மண்ணை கொட்டினா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை பிற்பகல்அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்து ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் சிவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சம்பத், ஊராட்சிசெயலாளா் சண்முகம் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து மக்கள் மறியலை கைவிட்டு சிறைப்பிடித்த அரசு பேருந்தினை விடுவித்தனா். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து சாலையில் கொட்டப்பட்ட மண் அகற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com