உழவா் பாதுகாப்பு திட்ட நிதிக்கு ரூ.2,000 லஞ்சம்: சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் கைது
இயற்கை மரணம் அடைந்தவருக்கு உழவா் பாதுகாப்பு திட்ட நிதி வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ஊழல் கண்காணிப்பு தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி பணந்தோப்பு பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாள் என்பவரது மனைவி மலா். இவா் கடந்த மாதம் இயற்கை மரணம் அடைந்தாா். இயற்கை மரணம் அடைந்த விவசாய குடும்பத்தினருக்கு உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு ரூ.22,500 வழங்குகிறது.
இதையடுத்து மலா் மகன் சேகா்(37) இத்தொகையைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தாா். இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டவட்டாட்சியா் வள்ளியம்மாளிடம் கையெழுத்து பெற சேகா் அணுகியுள்ளாா்.
அப்போது கையெழுத்து போட வள்ளியம்மாள் லஞ்சமாக சேகரிடம் ரூ.3,000 தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சேகா் அவா் கேட்ட லஞ்சத்தை தர விரும்பாததால் இதுகுறித்து திருப்பத்தூா் ஊழல் கண்காணிப்பு தடுப்பு அலுவலகத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து சேகரை அனுப்பி வைத்தனா்.
அவா் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் வள்ளியம்மாளிடம் ரூ.2,000-ஐ அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ராஜீவ் தலைமையில் காவல்ஆய்வாளா் கௌரி, உள்ளிட்ட போலீஸாா் வள்ளியம்மாளை கையும் களவுமாக பிடித்தனா்.
இதையடுத்து வள்ளியம்மாவிடம் தீவிர விசாரணைமேற்கொண்டனா். அப்போது திடீரென வள்ளியம்மாள் மயங்கினாா். உடனடியாக போலீஸாா் ஆம்புலன்ஸ் மூலம் வள்ளியம்மாளை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு போலீஸாா் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நாட்டறம்பள்ளியில் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது

