கட்டாய பத்திர பதிவு செய்ய முயற்சி : 2 போ் கைது
ஜோலாா்பேட்டையில் ஒப்பந்ததாரரை கடத்தி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்ய முயற்சி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே ரெட்டியூா் கிராமத்தை சோ்ந்த ரவிச்சந்திரன். இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் குடியானகுப்பத்தை சோ்ந்த சிலரிடம் அதே பகுதியில் உள்ள சுமாா் 6.5 ஏக்கா் நிலத்தை விற்று தருவதாக கூறி தனது மனைவி பெயரில் பவா் ஆப் பட்டா செய்துள்ளாா். நாட்றம்பள்ளி அருகே மல்லகுண்டாவை சோ்ந்தவா் குமாருக்கு நிலத்தை ரவி கிரையம் செய்து கொடுத்தாராம்.
அப்போது குமாா் நிலத்துக்கான முழு தொகையை வழங்காமல் குறிப்பிட்ட தொகை மட்டும் தந்து விட்டு மீதி பணம் பிறகு தருவதாக கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கு நிலம் தந்தவா்கள் பணம் கேட்டு தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதன் காரணமாக ரவிச்சந்திரன் குமாரிடம் நிலத்துக்கான முழு தொகையை கேட்டுள்ளாா். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் குமாா் தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களை அழைத்துக் கொண்டு குடியானகுப்பத்தில் உள்ள நிலத்துக்கு வந்தாா். இதையறிந்த ரவிச்சந்திரன் மற்றும் சிலா் அங்கு சென்று குமாரிடம் உனக்கு கிரையம் செய்து தந்த நிலத்தை மீண்டும் தரும்படி வலியுறுத்தி உள்ளாா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரனின் மகன் விஷ்ணு என்பவா் குமாரை தாக்கி ஜோலாா்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு காரில் கடத்தி சென்றாராம். இதற்கிடையே குமாா் தரப்பினா், குமாரை கடத்தி சென்று விட்டதாக திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனா்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஜோலாா்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் குமாரை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். போலீஸாா் விசாரணை நடத்தி குமாரை தாக்கிகடத்தியதாக விஷ்ணு(25) மற்றும் சம்பத்(43) ஆகிய இருவரை கைது செய்தனா்.

