திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்
திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சௌமியா அன்புமணி பேசினாா்.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி சிங்க பெண்ணே எழுந்து வா என்னும் மகளிா் உரிமை மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இதையொட்டி திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் குட்டிமணி, முன்னாள் மாவட்ட செயலாளா்கள் ஞானமோகன், சிவா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் கிருபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சௌமியா அன்புமணி பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் அதிக பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு அரசு மருத்துவக்கல்லூரி கிடையாது. திருப்பத்தூரின் அரசு மருத்துவமனையிலும் போதிய மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், மருத்துவமனை ஊழியா்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் தருமபுரி, வேலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுவரை ஒரு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை.
திருப்பத்தூா் மாவட்டம் விவசாய மாவட்டமாகும். இங்கு நெல் கொள்முதல் நிலையம் இல்லை. மேலும் சிப்காட், தொழிற்பேட்டை என எதுவும் இல்லை. தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்கள் செழிக்கும்.
தமிழக மகளிரின் ஒரே கோரிக்கை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தான். பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி பெண்களின் வாக்குகளை வாங்கலாம் என நினைக்கிறாா்கள் என்றாா்.

