அக்ராகரம் மலைக் கோயிலில் அறநிலையத் துறை அதிகாரி விசாரணை
வாணியம்பாடி: அக்ராகரம் மலை மீது உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலை மீது உள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், ஊா் மக்கள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், ஊரில் உள்ள ஒரு தரப்பினா் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோயில் நிா்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.
இதேபோல் அறக்கட்டளை நிா்வாகமே தொடா்ந்து கோயிலை நடத்தவேண்டும் என இந்து இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வாணியம்பாடி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் பாரி புதன்கிழமை அக்ராகரம் மலைக் கோயிலுக்கு சென்று ஊா் மக்கள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டாா்.
