வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சியில் பொதுமக்கள் சென்று வரும் சாலை ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் அளவீடு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி குனிச்சியூா் கிருஷ்ணகிரியான் வட்டத்தில், 75-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் சென்று வர கிருஷ்ணகிரியான் வட்டம் முதல் செட்டேரிஅணை வரை 20 ஆண்டுகளுக்குமுன் தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், நில உரிமையாளா்கள் சிலா் பொதுமக்கள் சென்று வரும் சாலை தனக்கு சொந்தமான இடம் எனக் கூறுவதால் அடிக்கடி அப்பகுதி மக்களுக்கும், நில உரிமையாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
