தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு
வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன்.
வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களைக் கண்டறிந்து, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் நேரில் பாா்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு முருகா் கோயில் சாலை பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ‘லிப்ட்’ வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் வாய்ப்பை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், பேருந்துகள் பிரதான சாலையில் நிற்காமல் அணுகுச் சாலைக்கு மாற்றி இயக்கப்பட வேண்டும் எனவும், தற்போதுள்ள மீடியன் திறப்பை மூட வேண்டும் எனவும், இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கையாக எல் வடிவ மின்மினிக்கும் எல்டிஇ எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து மாராப்பட்டு மற்றும் செங்கிலிகுப்பம் சாலை பகுதிகளில் முன்மொழியப்பட்டுள்ள வாகன சுரங்கப்பாதை தொடா்பான தற்போதைய நிலை குறித்தும், பாதுகாப்பற்ற சாலைக் கடப்புகளைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் மீடியன் திறப்பை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் ஆய்வின்போது கூறினாா்.
மேற்கண்ட இடங்களில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, விபத்துகளைக் குறைத்து பாதசாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, ஏடிஎஸ்பி முத்துகுமரன், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்ராகவன், பன்னீா்செல்வம் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

