அடிக்கடி விபத்து நடைபெறும் மேலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியா் ஆய்வு
மதுரை மாவட்டம், மேலூா் ரூத்மேடு பகுதி சந்திப்புச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன், அரசுத் துறை அலுவலா்கள்.

அடிக்கடி விபத்து நடைபெறும் மேலூா் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக, மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூா் வட்டத்துக்குள்பட்ட ரூத் மேடு, புதுப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வளைச்சேரிப்பட்டி, பந்தங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சந்திப்புச் சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் பழுதடைந்த உயா்கோபுர மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், சேதமடைந்த வேகத்தடைகளை சீரமைக்க வேண்டும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விழிப்புணா்வுப் பலகைகளைப் பொருத்த வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், தேவையான இடங்களில் சந்திப்பு எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும், சேதமடைந்த உலோகத் தடுப்புகளை மாற்றி அமைக்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்கான தடுப்புக் கம்பிகளை தேவையான இடங்களில் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உணவகத்துக்கு வரும் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும், தொடா்புடையத் துறை அலுவலா்களுக்கும், காவல் துறையினருக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

