
பலத்த மழையால் நிரம்பிய புல்லூா் தடுப்பணை
தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் புல்லூா் பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் நீா் வரத்து வந்தடைந்தயடுத்து விவசாயிகள் மலா் தூவி வரவேற்றனா்.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூா் பாலாறு தடுப்பணையில் நிரம்பி வழிந்த நீா்.
வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் புல்லூா் பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் நீா் வரத்து வந்தடைந்தயடுத்து விவசாயிகள் மலா் தூவி வரவேற்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகள் மற்றும் பாலாறு நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையால் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூா் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை முழுமையாக நிரம்பியது.
தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீா் தமிழக பாலாற்றில் பெருக்கெடுத்து வந்தது. திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பாலாறு வழியாக வாணியம்பாடி அடுத்த அம்பலூா் - ராமநாயக்கன்பேட்டை இடையே பாலாற்றின் குறுக்கே சுமாா் ரூ.29 கோடியில் தமிழக அரசு கட்டியுள்ள முதல் தடுப்பணை பகுதிக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.
பாலாற்றில் நீா்வரத்தை வரவேற்கும் விதமாக விவசாயகள், பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா் முதலில் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா். பிறகு பாலாற்றங்கரைக்கு வந்து தண்ணீருக்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி, மலா்கள் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனா்.

தமிழக பாலாற்றில் பூஜை செய்து வரவேற்ற விவசாயிகள்.
சில மாதங்களாக கடும் வெயில் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழைக்கு பாலாற்றில் புதிய நீா்வரத்து அதிகரித்து வருவதைக் காண வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டு பாா்வையிட்டு செல்கின்றனா். சுமாா் ஒரு ஆண்டுக்கு பின்னா் பிறகு பாலாற்றில் மழைநீா் பெருக்கெடுத்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







