திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில், டிராக்டர், வைக்கோல் கட்டும் இயந்திரம் மற்றும் களையெடுக்கும் கருவிகள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை இயக்குவது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விவசாயிகள் இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் அடையும் வகையில் வேளாண் துறை சார்பில் 45 விவசாய உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 11 விவசாய உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வேளாண்மை இயந்திரங்களை வாங்குவதற்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேளாண் இயந்திரங்கள் அந்தந்த விவசாய உற்பத்தியாளர் குழுக்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மேற்படி இயந்திரங்களை கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்யவும், கொள்முதல் செய்த வேளாண் இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து இயக்கவும், திறம்படக் கையாளவும், லாபகரமாகப் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்துப் பேசுகையில், அனைத்து விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் விவசாய ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும். அதோடு, இக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் இயந்திரங்களைக் கொடுக்காமல், அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்த பின்னரே வழங்க வேண்டும் என்றார்.
இதில், போக்குவரத்துத் துறை அலுவலக ஆய்வாளர் விஜயகுமார், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) கோ.பாண்டியன், கடம்பத்தூர் பி.பிரதாப் ராவ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை வேளாண் துணை இயக்குநர் ஆர்.திலகவதி, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சுரேஷ் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வி.எபினேசர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.