2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
மோவூர் கிராமத்தில் கால்நடைக்குத் தடுப்பூசி அளிப்பதைப் பார்வையிட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
மோவூர் கிராமத்தில் கால்நடைக்குத் தடுப்பூசி அளிப்பதைப் பார்வையிட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
இம்மாவட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும் நோக்கத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி, வரும் 21-ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இதில், மோவூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயினால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். இதனால், கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளிடம் பால் குடிக்கும் கன்றுகள் உயிரிழக்கவும் நேரிடும். இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். 
இதற்காக, இதுவரையில் 13 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 14-ஆவது முகாம் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி, தொடர்ந்து 21 -ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. 
மேலும், இதில் தடுப்பூசி போடாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு 22 -ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரையில் தடுப்பூசி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன. இதன் மூலம், 73 கால்நடை மருத்துவக் குழுக்களை அமைத்து, பசு, எருமை உள்ளிட்ட 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதனால், இக்குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் வருகை தர உள்ளனர். இதைப்பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 
நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எம்.கனியப்பன், உதவி இயக்குநர் எஸ்.ராமச்சந்திரன், கால்நடை மருத்துவர் வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com