இடம் அளந்து தராததால் 10 ஆண்டுகளாக தாமதமாகும் நூலகக் கட்டடப் பணி: நிதி ஒதுக்கியும் பலனில்லை

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக 3 சென்ட் இடத்தை ஒதுக்கியும் வருவாய்த்துறையினர் அளந்து
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலகம்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலகம்.


கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக 3 சென்ட் இடத்தை ஒதுக்கியும் வருவாய்த்துறையினர் அளந்து தராததால் கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டடம் கட்டும் பணி தாமதமாகிக் கொண்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும் இதுவரை பலனில்லாததால் கட்டுமானச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புமுள்ளது
கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் 1966-ஆம் ஆண்டு முதல் கிளை நூலகம் 3 சென்ட் பரப்பளவில் செயல்பட்டு வருகின்றது. தற்போது இந்நூலகத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 50 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நடைபோடும் இந்த நூலக கட்டடத்தின் மேல் தளம் பெயர்ந்தும்,  சுவர்கள் விரிசல் விட்டும் தற்போது காட்சியளிக்கிறது. தினமும் 500 வாசகர்கள் வரை இந்நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்கள்,  மாணவர்கள் பல மடங்கு அதிகரித்த நிலையில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி கிளை நூலகம்  உருவானதற்கு 20 ஆண்டுக்குப் பின் வந்த நூலகங்கள் கூட அனைத்து வசதிகளுடன் உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி கிளை நூலகத்தின் கட்டடம் நிலை மிகவும் பரிதாபமாய் உள்ளது.
இந்நிலையில் நூலகம்,  இணைய மையம்,  ஜெராக்ஸ் சேவை,  அரசு பணி போட்டி தேர்வு பயிற்சி என பல வசதிகளுடன் கும்மிடிப்பூண்டியில் கிளை நூலகம் புதிய கட்டடத்தில் செயல்பட வேண்டும்  என்ற நோக்கில் போதிய இடம் ஒதுக்க கும்மிடிப்பூண்டி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் வேலு 2010-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 10 சென்ட் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் கடந்த 20-01-2012 ஆம் ஆண்டு இப்போதுள்ள நூலகத்துக்கு அருகேயே 3  சென்ட் இடத்தை பொது நூலகத் துறைக்கு ஒப்படைத்தனர்.  அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த பலரும் இதை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தாலும் தீர்ப்பு பொது நூலகத் துறைக்குச் சாதகமாய் வந்தது. 
இதனிடையே பொது நூலகத் துறைக்கு வருவாய்த் துறை ஒதுக்கிய 3 சென்ட் இடத்தை அளந்துகல்  நட்டுத்தர மாவட்ட நூலகர் கடந்த  2016 பிப்ரவரி 22-இல் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். 
பொது நூலகத் துறை சார்பில் 6 சென்ட் இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து தரவில்லை. இதனால் இதுவரையில் கட்டடம் கட்டும் பணி தொடங்கவில்லை.
இதுகுறித்து வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் வேலு,  கும்மிடிப்பூண்டியில் அரை நூற்றாண்டிற்கும் மேல் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளாக இழுபறியில்  உள்ளது.  வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து தராததால் கட்டடம் கட்டும் பணி தற்போது தடைபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கட்டுமானச் செலவும் அதிகரிக்கும் என்றார்.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ் பாபு, இப் பிரச்னை தொடர்பாக கோட்டாட்சியருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவருடைய உத்தரவு கிடைத்தவுடன் நிலம் அளந்து தரப்படும் என்றார்.
வாசகர்களுக்கு அறிவுக் கண்ணைத் திறந்து, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நூலகக் கட்டடத்துக்கான இடத்தை அளந்து தந்து விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் உருவாக வேண்டும் என்பதுதான் இப்பகுதி வாசகர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com