ரயில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்ததற்காக கடந்த 28 மாதங்களில் 17,934 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், ரூ.57 லட்சத்து 71 ஆயிரத்து 590 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் முக்கியமானதாக சென்னை ரயில்வே கோட்டம் விளங்குகிறது. இந்தக் கோட்டம் வடதமிழகம், தெற்கு ஆந்திரம் வரை எல்லையாக கொண்டுள்ளது. இதில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கும், சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கும் நாள்தோறும் 640 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என நாளொன்றுக்கு சுமார் 11 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக மின்சார ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பரங்கிமலை விபத்து: கூட்ட நேரங்களில் ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்கள், இளைஞர்கள் பயணம் செய்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தின்போது, தவறி விழுவதால் உயிரிழப்புகளும், உடல் உறுப்புகளை இழந்து ஊனமாகும் சம்பவங்களும் தொடர் நிகழ்வாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி, சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்தவர்களில் 5 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள சிமெண்ட் தடுப்புச் சுவரில் அடிபட்டு உயிரிழந்தனர்.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் ரயில்களில் படிகளில் தொங்கியவாறு பயணிப்போர் மீது ரயில்வே சட்டம் 156-ஆவது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் அல்லது தண்டனையும் விதிக்கப்படுகிறது.
ரூ.57.71 லட்சம் அபராதம்: அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்ததற்காக கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து 2019 ஏப்ரல் வரையிலான 28 மாதங்களில் 17,934 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.57 லட்சத்து 71 ஆயிரத்து 590 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவர்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
187 பேர் உயிரிழப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் படியில் தொங்கியவாறு பயணம் செய்தல், ஓடும் ரயிலில் ஏறுதல், தடுமாறி விழுதல் ஆகிய சம்பவங்களால் கடந்த 2017-இல் 70 பேரும், 2018-இல் 96 பேரும், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 21 பேரும் என மொத்தம் 187 பேர் உயிரிழந்துள்ளனர். 306 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியது: சென்னை ரயில்வே கோட்டத்தில் 136 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ரயில்கள் வந்து செல்லும்போது, ரயில்களில் படியில் தொங்கிவாறு பயணிப்பவர்களைப் பிடித்து எச்சரிக்கை செய்கிறோம். இருப்பினும், சிலர் தொடர்ந்து அதே தவறை செய்வதால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்தான் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர் என்றனர்.