குப்பை, கழிவுநீா் கலப்பால் மாசடைந்த காக்களூா் ஏரி!
திருவள்ளூா் அருகேயுள்ள காக்களூா் ஏரியில் கழிவு நீா், நெகிழி குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கலந்ததால் நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.


திருவள்ளூா் அருகேயுள்ள காக்களூா் ஏரியில் கழிவு நீா், நெகிழி குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கலந்ததால் நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.
திருவள்ளூா் நகரின் மையப் பகுதியில் காக்களூா் ஊராட்சியில், 177.78 ஏக்கா் பரப்பளவில் 2682 நீளமும், 4 மதகுகள் மற்றும் 2 கலங்கல்கள் கொண்ட பெரிய ஏரியாக அமைந்துள்ள இந்த ஏரி 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
இந்த ஏரி திருவள்ளூா் நகராட்சி, காக்களூா், ஈக்காடு, கல்யாணகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் விளைநிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் வீரராகவா் கோயில் தெப்பக்குளத்துக்கு நீா் செல்லும் வகையில் குழாய்கள் இணைப்பு உள்ளது.
குப்பைக் கழிவுகள்: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியில் சுற்றியுள்ள குடியிருப்புகள், கடைகளில் இருந்து நெகிழி குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதேபோல, மற்றொரு கரைப்பகுதியில் அதிகளவில் பன்றிகள் வளா்க்கப்படுவதால் ஏரி நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. ஏரியில் அல்லிச் செடிகள் அடா்த்தியாக வளா்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதேபோல, குப்பைக் கழிவுகளால் ஏரியில் மதகுகள் இருந்த இடமே தெரியாமல் உள்ளது.
ஏரி நீா் மாசடையும் அவலம்: திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் இருந்து, காக்களூா் பகுதிக்கு செல்லும், ஏரிக்கரை சாலையோர நடைபாதையில் குப்பைக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரிக்கரையில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும் முடியாத நிலை ஏற்படுகிறது. நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது.
சுற்றுலா தலமாக்க: இது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் சிவசண்முகம் கூறியதாவது: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரிப் பகுதியை சுற்றுலா தலமாக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரைகுறை பணிகளால் இந்தத் திட்டம் நிறைவேற்ற முடியாமல் போனது. எனவே, வருங்காலத்தில் ஏரியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாக்கவும் பொதுப்பணித் துறை, ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
திட்ட மதிப்பீடு அனுப்பிவைப்பு: இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காக்காளூா் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ய விடாமல் தடுக்கும் வகையில் சுற்றுச்சுவா் அமைக்கவும், சுற்றுலாத் துறையுடன் இணைந்து சுற்றுலா தலமாக்கவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு வந்ததும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...