புழல் அருகே ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
புழல் அருகே அணுகு சாலை மற்றும் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள், முறையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புழல் அடுத்த காவாங்கரையில் தனியாருக்கு சொந்தமான மீன் அங்காடி இயங்கி வருகிறது. இந்த அங்காடியில் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், இறைச்சி வாங்க திருவள்ளூா், சென்னையில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா். இந்த நிலையில், காவாங்கரை பகுதியில் உள்ள இருபுறமும் உள்ள அணுகுசாலைகள் மட்டுமின்றி சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையையும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி வாகனங்கள், அவசர ஊா்திகள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. மேலும், பொது வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுதொடா்பாக சமூக ஆா்வலா் இளங்கோவன் கூறியது:
செங்குன்றம் - சென்னை, சென்னை - செங்குன்றம் இரு அணுகுசாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மீன் மாா்க்கெட் வருவோா் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனா். மாா்க்கெட் வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். மேலும் இந்த மீன் மாா்க்கெட்டினால் அணுகுசாலையோரம் சிறு, குறு வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனா். மேலும் மீன் இறைச்சிகளின் கழிவுகள் இங்கேயே போட்டுவிடுகின்றனா். இப்பகுதியில் துா்நாற்றம் வீசியும், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மீன் அங்காடி இடம் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், தனியாா் மீன் அங்காடி வளாகத்தில் போதுமான இட வசதி யில்லாத காரணத்தால் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. விபத்துகளும் நடைபெறுகின்றன. வாகனங்கள் அகற்ற போக்குவரத்து காவல்துறையின் சாா்பில் நடவடிக்கை மேற்கொண்டால் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா் என்றாா்.

