ஆவடியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா?

ஆவடியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால், ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற சென்னை, திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஆவடி: ஆவடியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால், ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற சென்னை, திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயமும், பண விரயமும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, திருநின்றவூர், திருவேற்காடு, வேப்பம்பட்டு, கருணாகரச்சேரி, அன்னம்பேடு, நெமிலிச்சேரி, நடுகுத்தகை, பொத்தூர், வெள்ளச்சேரி, வெள்ளானூர், கர்லப்பாக்கம், பாண்டேஸ்வரம், பாலவேடு, மோரை, கொசவன்பாளையம், பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள அரசு, தனியார் மேல்நிலை பள்ளிகளில் படித்து முடித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் வெளியேறி வருகின்றனர். இவர்கள் மேற்படிப்பு பெற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேற்கண்ட பகுதியில் இல்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி நகரத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

இப்பகுதியில் அரசுக் கல்லூரி இல்லாததால், சென்னை மாநகரத்தில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் அல்லது புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு தான் சென்று பயில வேண்டும். சென்னையில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாநகரப் பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர்.

இவர்களுடன், புறநகர் பகுதியில் இருந்து சில மாணவர்களும் போட்டிபோட்டு தான் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சிரமப்பட்டு சேருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி இல்லாததால் தான் நகர, கிராமப்புற மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும், பெரும்பாலான மாணவர்கள் ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தான் அதிக அளவு கல்விக் கட்டணம் செலுத்தி மேற்படிப்பில் சேருகின்றனர். இதனால் பல ஏழை மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி இல்லாததால் மாணவர்கள் பல கி.மீ. தொலைவில் சென்னை, திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிக்குச் செல்ல கால விரையம், பண விரயம் ஏற்படுகின்றன. சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க அரசுக்கு பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இணைந்து ஆவடி பகுதியில் உள்ள அரசு நிலம் அல்லது அரசு துறைகளுக்குச் சொந்தமான இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com