திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம்
காா்த்திகை தீபத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மலைக்கோயில், கொடிமரம் அருகே பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபடுகின்றனா்.
இந்நிலையில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை, 6 மணிக்கு, மூலவா் முருகப்பெருமான், உற்சவா்கள் ஆபத்சகாய விநாயகா், ஆறுமுகா்,வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் மற்றும் கொடி மரம் ஆகிய சந்நிதிகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து திருத்தணி நகரில் உள்ள கோயில்கள், வீடுகள் மற்றும் அனைத்து வணிக வளாகங்களிலும் பரணி தீபம் ஏற்றி வழிப்பட்டனா். புதன்கிழமை மாலை பச்சரிசி மலையில் மகா தீபமும், முருகன் கோயில் தோ்வீதியில் சொக்கப் பனையில் நெய் தீபம் ஏற்றி வைக்கப்படும்.

