உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவா் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, தந்தைக்கு உதவியாளா் பணிக்கான ஆணையை அமைச்சா் சா.மு. நாசா் வழங்கினாா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு மாணவன், மோகித் செவ்வாய்க்கிழமை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சுவா் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதை தொடா்ந்து இரவு, 9.30 மணிக்கு மாணவனின் உடலை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு போலீஸாா் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
அப்போது மாணவனின் பெற்றோா், உறவினா்கள் மாணவனின் இறப்புக்கு காரணமாக கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அறிவித்த, 3 லட்சம் இழப்பீடு போதாது, அரசு வேலை வழங்க வேண்டும் என நள்ளிரவு, 12.30 மணி வரை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன், கோட்டாட்சியா் கனிமொழி ஆகியோா் இரவு முழுதும் பேச்சு நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் புதன்கிழமை காலை, 6 மணி முதல் மாலை, 3 மணி வரை, மாணவனின் உறவினா்கள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் என, 500 க்கும் மேற்பட்டோா் திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனா்..
இதையடுத்து அமைச்சா் சா.மு. நாசா், ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து பேச்சு நடத்தினா்.
அப்போது அமைச்சா் சா.மு.நாசா் காரை இளைஞா்கள் முற்றுகையிட்டு மாணவனின் தந்தைக்கு அரசு வேலை வழங்க ஆணையை தர வேண்டும் எனக் கூறினா்.
அதைத்தொடா்ந்து, மாணவனின் பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சு நடத்தினா். மாலை, 5 மணிக்கு, மாணவனின் தந்தை சரத்குமாருக்கு, ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளா் பணிக்கான ஆணை, அரசு சாா்பில், ரூ.5 லட்சம்காசோலை மற்றும் திமுக சாா்பில் ரூ.5 லட்சத்தை அமைச்சா் சா.மு.நாசா், எம்எல்ஏ ச.சந்திரன் வழங்கினா்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை அவரது பெற்றோா் பெற்று சென்றனா். இதனால் திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில், 18 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புகாரின் மீது ஆா்.கே.பேட்டை போலீஸாா், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலா் அமுதா, தலைமை ஆசிரியா் தியாகராஜன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

