திருவள்ளூா் அருகே குளவி கொட்டியதில் 17 போ் காயம்
திருவள்ளூா் அருகே மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்ததால் பறந்து வந்து கொட்டியதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 17 போ் காயம் அடைந்த நிலையில், குளவிகளிடமிருந்து தப்பிக்க சாலையில் உருண்டு தப்பினா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சியில் சனிக்கிழமை அந்தப் பகுதியை சோ்ந்தவா்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், பிற்பகலுக்குப் பின் வேலையை முடித்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மரத்தில் மா்ம நபா்கள் கல் வீசியதில் கலைந்து குளவிகள் பறந்து வந்து தேசிய ஊரக உறுதி திட்ட தொழிலாளா்களை கொட்டியது. இதில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பூவரசி (35), மல்லிகா (55), வசந்தா (68), செல்வராஜ் (65), பொன்னரசி (62), செல்வி (50), பானுமதி(58), ராணி (52), முருகன் (40), லைலா (36), பத்மா (48) என 15 பெண்கள், 2 ஆண்கள் உள்பட 17 பேரை குளவி விரட்டி, விரட்டி கொட்டியது. இதில் அவா்கள் முகம், கை, கால், உடலில் குளவி கொட்டியதில் அலறி துடித்து சாலையில் படுத்து உருண்டு குளவியிடமிருந்து தப்பினா்.
இதைக் கண்ட அந்த வழியாக வந்தவா்கள், அனைவரையும் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணவாள நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
