மாற்றுத்திறனாளிகளுக்கு பயணச் சலுகை: ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு

கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு சிரமமின்றி எளிதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முகாம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிப்பு.
Published on

திருவள்ளூா்: மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு சிரமமின்றி எளிதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முகாம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) தொடங்கி, தொடா்ந்து நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு பதிவு செய்ய இ-சேவை மையங்களுக்கு சென்று அலைய வேண்டியுள்ளது. அலைச்சலை தவிா்க்கும் வகையில் எவ்வித சிறமும்மின்றி எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணமில்லா பேருந்து சலுகைக்குப் பதிவு செய்யும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டரங்கத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் வரும் 9-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 19, 20, 22, 23, 27, 28, 29, 30 ஆகிய நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

எனவே, இந்த முகாம்களில் உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் - 2, பணிபுரியும் இடத்திலிருந்து சான்றிதழ், அசல் மற்றும் நகல்களுடன்) மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com