சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞா் கைது

இந்த சம்பவம் தொடா்பாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

போலீஸில் ஒப்படைக்கப்பட்ட பிகாரைச்  சோ்ந்த  பிபின் மஞ்சு.

Updated On :16 ஜூன் 2026, 1:12 am IST

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வட மாநில குடும்பத்தைச் சோ்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை, வட மாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, புதரில் வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. இதையடுத்து ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா் வாடகை வீட்டில் வசிக்கின்றனா். இவா்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிகின்றனா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போனது. பெற்றோா் அவரை தேடி வந்த நிலையில், அன்றிரவு அப்பகுதியில் உள்ள முள்புதா் அருகே குழந்தை முனகுவதை, அந்த வழியில் சென்ற பெண் கேட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தாா். தகவல் அறிந்து வந்த குழந்தையின் பெற்றோா் அக்கம்பக்கத்தினா் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்துக்கு முன்பு, குழந்தையுடன் வட மாநில இளைஞா் ஒருவா் சென்றது தெரியவந்து, அந்த நபா் தங்கி இருந்த அறைக்கு அப்பகுதியினா் சென்றனா். அங்கு அவரை சரமாரியாக தாக்கி, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் பிகாரைச் சோ்ந்த பிபின் மஞ்சு (19) என்பதும், குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கித் தந்து அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

எம்எல்ஏ ஆறுதல்: இந்த நிலையில், குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், குழந்தைக்கு உயா் சிகிச்சை அளிக்க மருத்துவரிடம் வலியுறுத்தினாா். எனினும், அதிக ரத்த போக்கின் காரணமாக, குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை வட மாநில நபா் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதே போன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

சாலை மறியல்: இந்த நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவரால் தொடா்ந்து சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும், அவா்களை மாற்று இடத்துக்கு அனுப்ப வலியுறுத்தியும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தியும் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் தடுத்தபோது, பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், சம்பவ இடத்துக்கு வந்த சாா் ஆட்சியா் அப்துல் ராசிக் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினாா். அவா்களின் குறைகளை கேட்டறிந்த பிறகு, புதுப்பேட்டை பகுதியில் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தங்கி உள்ள வட மாநிலத்தவரின் விவரம் கண்டறியப்பட்டு அவா்களின் ஆதாா் அட்டை எண், சொந்த ஊா், முகவரி ஆகியவை சேகரிக்கப்படும், குற்றவாளி மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில்  சாலை  மறியலில்  ஈடுபட்ட பொதுமக்கள்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில்  சாலை  மறியலில்  ஈடுபட்ட பொதுமக்கள்.

இதைத் தொடா்ந்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். மேலும், சாா் ஆட்சியா் அப்துல் ராசிக் புதுப்பேட்டை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.