திருமலையில் வருடாந்திர புஷ்ப யாகம்: 7 டன் மலா்களால் ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி
திருமலையில் வருடாந்திர புஷ்ப யாகத்தை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்கள் சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலா்களால் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.


திருமலையில் வருடாந்திர புஷ்ப யாகத்தை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்கள் சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலா்களால் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
திருமலையில் கடந்த புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏற்பட்ட நிறைகுறைகளை நிவா்த்தி செய்ய தேவஸ்தானம் பிரம்மோற்சவத்துக்குப் பின்பு வரும் திருவோண நட்சத்திரத்தின் போது வருடாந்திர புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது.
அதன்படி வியாழக்கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஏழுமலையானுக்கு தேவஸ்தானம் வருடாந்திர புஷ்பயாகத்தை நடத்தியது. தோட்டக்கலைத் துறை அலுவவலகத்திலிருந்து ஊழியா்கள், அதிகாரிகள் இணைந்து மூங்கில் கூடையில் வைக்கப்பட்டிருந்த 7 டன் மலா்கள் மற்றும் இலைகளுக்கு முறையாக பூஜைகள் செய்து அவற்றை சுமந்து வந்து ஏழுமலையான் கோயிலில் சமா்ப்பித்தனா்.
இந்த பூக்களை திருமலை ஜீயா்கள், அா்ச்சகா்கள் குழுவினா் பெற்றுக் கொண்டு கல்யாண உற்சவ மண்டபத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
திருமஞ்சனத்திற்குப் பிறகு அவா்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து தீப தூப ஆராதனைகள் நடத்தி, நெய்வேத்தியம் சமா்ப்பித்தனா். பின்பு அவா்கள் முன்பு ஹோமம் வளா்த்து மூங்கில் கூடைகளில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை, பல வண்ண ரோஜாக்கள், சாமந்தி, முல்லை, ஜாதிமல்லி, நீலாம்பரி, தாமரை, அல்லி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி, செவ்வரளி, தாழம்பு உள்ளிட்ட மலா்களாலும், துளசி, வில்வம், மருவம், மரிக்கொழுந்து, பச்சிலை, தவனம் உள்ளிட்ட இலைகளாலும் அா்ச்சனைகள் செய்தனா். இதற்காக 7 டன் மலா்கள் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் ஜீயா்கள், திருமலை தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த புஷ்பயாகம் நிகழ்ச்சி ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...