3 வயது சிறுவனை தூக்கிச்சென்ற சிறுத்தை! திருமலையில் பரபரப்பு!!

திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரையாக  பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை, சிறுத்தை தாக்கி தூக்கிச் சென்றதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
3 வயது சிறுவனை தூக்கிச்சென்ற சிறுத்தை! திருமலையில் பரபரப்பு!!

திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரையாக  பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை, சிறுத்தை தாக்கி தூக்கிச் சென்றதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டம் ஆதோனியை சேர்ந்த, 6 பேர் கொண்ட குடும்பத்தினர் வியாழக்கிழமை இரவு மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஏழாவது மைலில் ஆஞ்சனேய சுவாமி சன்னதியை தாண்டி சிறிது தூரம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பெற்றோர்கள் முன்னாள் சென்று கொண்டிருக்க தனது தாத்தாவுடன்  நடந்து சென்று கொண்டிருந்த கெளசிக் என்ற 3 வயது சிறுவன், அங்குள்ள கடையில் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல் நலனை நேரில் சென்று விசாரிக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல் நலனை நேரில் சென்று விசாரிக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி.

அச்சமயத்தில் வனப்பகுதியில் வலது புறத்தில் இருந்து வந்த சிறுத்தை சிறுவன் கெளசிக்கை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பக்தர்கள் சிறுவனின் தாத்தா மற்றும் காவல் துறையினர் சத்தம் போட்டதையடுத்து, சிறுவனை 150 மீட்டர் வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்ற சிறுத்தை வனப்பகுதியில் விட்டுவிட்டு சிறுத்தை  தப்பி ஓடியது.

பின்னர், அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் சிறுவன் அழுவதை கேட்டு, அங்கு சென்று பார்ப்பதற்குள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த நிலையில் சிறுவன் மட்டும் இருந்தான். அவனை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக திருப்பதியில் உள்ள பத்மாவதி இருதாலயா மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேரில் பார்வையிட்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார் . மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்களை எச்சரிக்கையுடன் கும்பலாக செல்லும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுத்தை மீண்டும் பக்தர்கள் மத்தியில் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செயல் அதிகாரி சுப்பாரெட்டி, 'மலைப்பாதையில் உள்ள ஏழாவது மைலில் ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி தாண்டிய பின்னர் ஆதோனியை சேர்ந்த பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். பெற்றோர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க சிறுவன் அவரது தாத்தாவுடன் கடையில் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வலது புறம் இருந்து வந்த சிறுத்தை சிறுவனை தூக்கிச் கொண்டு வனப்பகுதியில் சென்றது. 

சிறுவனின் தாத்தா மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டும் சிறுத்தை வனப் பகுதியில் ஓடியது. உடனடியாக அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது நகர காவல் நிலைய எஸ்.ஐ. ரமேஷ் மற்றும் காவல் துறையினர் செல்போன் மூலம் டார்ச் அடித்தும் சத்தம்  எழுப்பினர். இதனால் வனப்பகுதிக்கு கொண்டு சென்ற சிறுத்தை சிறுவனை  ஒரு இடத்தில் விட்டு சென்றது. உடனடியாக சிறுவன் அழுது கொண்டிருப்பதை பார்த்த அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் உடனடியாக தகவல் தெரிவித்த 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவுடன், சிறுவனின் கழுத்துப்பகுதியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவக் குழுவினருக்கு முன்கூட்டிய தகவல் தெரிவிக்கப்பட்டதால்  சுவிம்ஸ் மருத்துவமனையில் இருந்து அனைத்து துறை சிறப்பு மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். சிறுவனை கொண்டுவரப்பட்டவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் தற்போதைக்கு அபாய கட்டம் இல்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் நியூரோ உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி குழந்தையின் உடல் நலன் குறித்து நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். குழந்தையின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com