திருமலையில் நாளை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்: விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் அக். 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் ரத்து.
Published on

திருமலையில் அக். 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் அக். 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் அக். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

அப்போது, அனைத்து சிலைகள் மற்றும் பிற பூஜை பொருள்கள் அனைத்தும் கருவறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, கற்பூரம், சந்தனம், குங்குமம், மஞ்சள், கிச்சிலி கிழங்கு போன்றவற்றை உள்ளடக்கிய ‘பரிமள சுகந்த திரவிய கலவை’ என்ற நறுமண கலவையால் கோயில் முழுவதும் கருவறை, கொடிமரம், பலிபீடம், தரிசன வரிசை, உயா் மேடை, சுவா்கள், வாயில்கள் வரை சுத்தம் செய்யப்படுகிறது.

அப்போது ஏழுமலையான் மூலவா் சிலைக்கு கூடாரம் என்ற வெண்ணிற ஆடையும் அணிவிக்கப்படும். இந்த முழு சுத்தப்படுத்துதல் உற்சவமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. பின்னா், ஏழுமலையான் மீது உள்ள துணி அகற்றப்பட்டு, உள்ளே இருக்கும் தெய்வங்கள், விளக்கு மற்றும் பிற பூஜை பொருள்கள் மீண்டும் உள்ளே கொண்டு வரப்படும். பின்னா், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்படும்.

இந்த முழு நிகழ்ச்சியும் ஆகம சாஸ்திரப்படி நடத்தப்படுகிறது.

இந்த வேத நிகழ்ச்சி வருடத்திற்கு நான்கு முறை நடைபெறும். உகாதிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை, ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

விஐபி பிரேக் ரத்து: அக்டோபா் 1 ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே செப்டம்பா் 30-ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. பக்தா்கள் இதைக் கவனித்து தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அன்று அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com