திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோட்டார் சைக்கிளில் செல்வோரிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
செய்யாறை அடுத்த விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி எல்லப்பன் (63). இவர், புதன்கிழமை பிற்பகல் விண்ணவாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செய்யாறுக்கு சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் சாலையில் வேல்சோமசுந்தரம் நகர் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் நின்றிருந்த மர்ம நபர்கள் இருவர் எல்லப்பனை வழிமறித்து, அவரை மிரட்டியதுடன், அவர் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீஸார் விரைந்து சென்று இரு இளைஞர்களையும் விரட்டிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் செய்யாறு திருவோத்தூர் ரஞ்சித் ((21), கொடநகர், அறிஞர் அண்ணா நகர் ஆனந்தன் (24) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் பிரகாஷ் என்பவரை வழிமறித்து ரூ.50 ஆயிரத்தை பறித்து சென்றதும், செய்யாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை வழிமறித்து தொடர்ந்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.