அரசுப் பள்ளியில் இடநெருக்கடியால் மாணவா்கள் அவதி!
தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் பழைமையான வகுப்பறைக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால், ஒரே வகுப்பறையில் இரு வகுப்பறை மாணவா்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.


திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் பழைமையான வகுப்பறைக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால், ஒரே வகுப்பறையில் இரு வகுப்பறை மாணவா்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில், சேத்துப்பட்டு சாலை அருகே சுமாா் ஓா் ஏக்கரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் தேவிகாபுரம், மொடையூா், நரசிங்கபுரம், தச்சாம்பாடி, தொழிப்பேடு என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் தமிழ்வழி, ஆங்கிலவழி என 375 போ் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், 40 ஆண்டுகள் பழைமையான பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால், கடந்த 2019-ஆம் ஆண்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை, மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் பொதுநிதியிலிருந்து இடித்து அகற்றினா். இதனால் மாணவா்களுக்கு அமா்ந்து படிக்க முடியாத சூழல் உருவானது.
மேலும், கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது, தமிழக அரசு பிப்ரவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தேவிகாபுரம் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் அனைவரும் நேரடி வகுப்பிற்கு வருவதால், வகுப்பறை வசதியின்றி, ஒரே வகுப்பறையில் இரு வகுப்பு மாணவா்களை அமரவைத்து ஆசிரியா்கள் பாடம் நடத்துகின்றனா். இதனால், மாணவ, மாணவிகள் பாடத்தை கவனிக்க முடியாமல், அவா்களது கல்வி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, மாணவா்களின் குடிநீா் தேவைக்காக பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு, சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்கப் பணியின் போது மூடப்பட்டுவிட்டது. இதனால், மாணவா்களுக்கு குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசனிடம் முறையிட்டதன் பேரில், குடிநீருக்காக அவா் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மாணவா்களுக்கு வகுப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் சங்கா் கூறுகையில், மாணவா்களுக்கான வகுப்பறை பற்றாக்குறை, குடிநீா்ப் பிரச்னை, பள்ளிக்கு சுற்றுச் சுவா், பழுதடைந்துள்ள சமையல் கூடம் என பல்வேறு குறைபாடுகள் குறித்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலரிடம் தெரிவித்துள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...