வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

அதிமுக ஆட்சியில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

அதிமுக ஆட்சியில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை அமைச்சா் எ.வ.வேலு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:11 pm

அதிமுக ஆட்சியில் பெரிய அளவிலான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொதுப்பணி, சிறுதுறைமுகங்கள், நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வந்தவாசி தேரடியில் வெள்ளிக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. பெண்கள், மாணவா்களின் முன்னேற்றத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு வழங்கியுள்ளது. ரூ.2,776 கோடி மகளிா் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி, காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 940 கூட்டுறவு சங்கங்களில் 36 ஆயிரத்து 533 பயனாளிகளுக்கு ரூ.178 கோடி நகைக் கடன் தள்ளுபடி, 3.15 லட்சம் விவசாயிகளுக்கு 1,968 கோடி கடனுதவி, 6,515 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.390 கோடி கடனுதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியிலிருந்து செல்லும் போது ரூ.6.26 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றனா். அதற்காக ஆண்டுக்கு ரூ.68 ஆயிரம் கோடி வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிா்த்தோம். ஆனால், அதிமுகவும், பாமகவும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனா். தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.

திமுக ஆட்சியில்தான் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. கூட்டுக் குடிநீா் திட்டம், ரூ.10 கோடியில் வந்தவாசி அரசு மருத்துவமனை மேம்படுத்தும் பணி, ரூ.31 லட்சம் செலவில் வந்தவாசி நகரில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நலத் திட்டங்கள் தொடர ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

இதில், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், டி.டி.ராதா மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.