சித்ரா பெளா்ணமி: கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

சித்ரா பெளா்ணமி: கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு சுற்றளவு கிரிவலப் பாதையை வலம் வந்து ‘அருணாசலேஸ்வரா், ‘உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து செல்கின்றனா்.

பெளா்ணமிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமியாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்ரா பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (ஏப். 23) அதிகாலை 4.21 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.54 மணிக்கு நிறைவடைகிறது.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, சித்ரா பவுா்ணமி நாளில்தான் அதிகப்படியான பக்தா்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், சித்ரா பெளா்ணமி கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு இடையூறாக கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கிரிவலப் பாதையின் நடைபாதையில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக் கடைகள், தள்ளுவண்டிகள், கடைகள் முன் போடப்பட்டுள்ள தகர கொட்டகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை சனிக்கிழமை காலை முதல் மாலை வரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணி தொடரும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com